நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் அல்லது அதன் விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சில ஷரத்துக்களை குழுநிலையில் திருத்தங்களைத் தொடர்ந்து சட்டமூலத்தை விசேட பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்மானம் இன்று செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்டது.
நிகழ்நிலை காப்பு சட்டமானது செப்டம்பர் 2023 இல் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இது வர்த்தமானியாக வெளியிடப்பட்டவுடன் இந்த சட்டமூலத்தை எதிர்த்து, குறைந்த து 45 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன, மேலும் இது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக பல விசனங்கள் எழுந்தன.
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் கடந்த ஒக்டோபர் மாதம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.