கையிருப்பு நிறைவடையும் வரையில், அனைத்து சீனி களஞ்சியசாலைகளையும் கண்காணிப்பதற்கான பணிகளில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கிலோ சீனியின் தற்போதைய கட்டுப்பாட்டு விலையான 275 ரூபாவிற்கு அதிகமாக சீனியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பொருளுக்கும் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டால் அந்த பொருளுக்கான தட்டுப்பாடு சந்தையில் நிலவும். எனினும், கடந்த சில தினங்களாக, சந்தைக்கு களஞ்சியசாலைகளில் இருந்து குறைந்தளவிலேயே சீனி விடுவிக்கப்படுகிறது.
எனவே, கையிருப்பு நிறைவடையும் வரையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் களஞ்சியசாலைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டாயமாக சந்தைக்கு விநியோகிக்கப்படும் சீனி உரிய அளவில் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன், அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.