தெனியாயவில் கடந்த வாரம் (நவம்பர் 16) இளம் பௌத்த பிக்கு ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தெனியாய பல்லேகம பகுதியில் வைத்து கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், பல்லேகம, கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
கட்டுவன பிரதேசத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர், தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக சென்று கொண்டிருந்த போது தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலில் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
திருமணமான 37 வயதான பொலிஸ்காரர், இந்த விடயம் தொடர்பாக அவரை தாக்கிய பதின்ம வயது பிக்குவின் 26 வயது சகோதரியுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
தெனியாய பொலிஸார், குறித்த இளம் பிக்குவை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.