இலங்கை கடற்படையினால் கைதுசெய்யப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 37 கடற்றொழிலாளர்களை நேற்று முன்தினம் கடற்படையினர் கைதுசெய்ததுடன் அவர்களின் 5 படகுகளையும் கைப்பற்றினர்.
இந்த மாதத்தில் மாத்திரம் 64 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 10 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட தமிழக கடற்றொழிலாளர்களிடையே அச்சத்தையும் மன உளைச்சலையும் உருவாக்கி உள்ளது.
இந்தநிலையில், தமது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் போவதாக தமிழக கடற்றொழிலாளர்கள் உணருகிறார்கள் எனவே, தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசாங்கம் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.
அத்துடன், கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, மத்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.