Friday, December 8, 2023
HomeTamil"பிக்காசோ ஓவியந்தான்.."! ஏலத்தில் கிடைத்த பெரும் தொகை!!

“பிக்காசோ ஓவியந்தான்..”! ஏலத்தில் கிடைத்த பெரும் தொகை!!

மேற்கத்திய நாடுகளில் கலைப்பிரியர்கள் அதிகம். அதிலும், ஓவியங்களை தேடித்தேடி வாங்கும் செல்வந்தர்களுக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குறைவே இருக்காது.

புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை வாங்கி வைத்து கொள்வதை பெருமையாக நினைக்கும் கோடீசுவரர்கள் அதிகம் உள்ளதால், விற்க விரும்புபவர்களிடம் அவற்றை வாங்கி ஏலமுறை மூலம் விற்றுத்தரும் ஏல நிறுவனங்களும் மேலை நாடுகளில் அதிகம்.

1881ல் ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதியில் பிறந்து அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரம் உள்ள பார்சிலோனா நகரில் வளர்ந்தவர் ஓவியர் பாப்லோ பிக்காசோ (Pablo Picasso).

1904ல் பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்து, தனது படைப்புகள் மூலம் 20-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக பிக்காசோ திகழ்ந்தார்.

1973ல் தனது 92-வது வயதில் மறையும் வரை சுமார் 70 வருடங்கள் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் கலைப்பிரியர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

இந்நிலையில், 1968ல், எமிலி ஃபிஷ்ஷர் லாண்டவ் (Emily Fisher Landau) என்பவர் வாங்கி வைத்திருந்த பிக்காஸோ வரைந்த “ஃபெம் அ லா மான்ட்ரே” (Femme a la Montre) எனும் அரிய ஓவியத்தை வேறு ஒருவர் வாங்கியிருந்தார். அது சில தினங்களுக்கு முன் சாத்பீஸ் (Sotheby’s) எனும் ஏல நிறுவனத்தின் மூலமாக விற்பனைக்கு வந்தது.

1932ல் பிக்காஸோ வரைந்த இந்த ஓவியத்திற்கு மேரி தெரேஸ்-வால்டர் (Marie Therese-Walter) எனும் பெண், மாடலாக இருந்தார். மேரி, பிக்காசோவின் நெருக்கமான தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நீல நிற பின்னணியில் மிக பெரிய சிம்மாசனம் போன்ற இருக்கையில் மேரி அமர்ந்திருப்பதை சித்தரிக்கும் இந்த ஓவியம், ஏலத்திற்கு வரும் முன் சுமார் ரூ.1000 கோடி ($120 மில்லியன்) மதிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்பார்த்ததை விட ஏலத்தில், இந்த ஓவியம் சுமார் ரூ.1157 கோடி ($139 மில்லியன்) தொகைக்கு விலை போனது.

2015ல் கிறிஸ்டீஸ் (Christie’s) ஏல நிறுவனம் மூலமாக விற்கப்பட்ட பிக்காசோவின் “லே ஃபெம் டி அல்ஜெர்” (Les Femmes d’Alger) எனும் மற்றொரு ஓவியத்திற்கு ரூ.1500 கோடி ($179 மில்லியன்) தொகை கிடைத்திருந்தது.

தற்போது அவரது இந்த ஓவியத்திற்கு கிடைத்துள்ளது இரண்டாவது அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவின் மேற்பரப்பினை ஆராய்ச்சி செய்ய இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பிய சந்திரயான்-3 (Chandrayaan-3) விண்கலன் திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடிகள் செலவானதை ஒப்பிட்டு, ஒரு ஓவியத்திற்கு இத்தனை பெரும் தொகையா என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular