ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட “டிஜிட்டல் இலங்கைக்கான 2030 மூலோபாய செயல்முறை” உலக வங்கியின் தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் முயற்சியாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறையின் முன்னணி அமைப்பான இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சம்மேளனம், DigiGo வர்த்தக நாமத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான டிஜிடல் பிளேபுக் (Digital Playbook) ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்வு, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் அண்மையில் இடம்பெற்றது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய இயலுமையுடன் உள்நாட்டு டிஜிட்டல் சேவைகளுக்கு பிரவேசிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு, கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் LK Domain Registry நிறுவனத்துடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சம்மேளனத்தின் டிஜிட்டல் சேவைகள் பிரிவின் மூலம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SMEs) இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னணி காரணியாக இருப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 52% பங்களிப்பை வழங்குகின்றது. இந்த நாட்டில் 75% க்கும் அதிகமான வர்த்தகத் துறையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இதில் 20% ஏற்றுமதித் துறையில் பங்களிப்பு செய்கின்றன.
நவீன தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகங்களை இணைத்து இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த DigiGo நிகழ்ச்சி மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட முதலாவது DigiGo நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் 20ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.