Saturday, July 27, 2024
HomeTamilகேட்டல் குறைபாடு உள்ளவர்களும் இனி சாரதி அனுமதிப்பத்திரம் பெறலாம்

கேட்டல் குறைபாடு உள்ளவர்களும் இனி சாரதி அனுமதிப்பத்திரம் பெறலாம்

நாடளாவிய ரீதியில் முதன்முறையாக, கேட்டல் குறைபாடு உடையவர்களுக்கான இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

1998 ஆம் ஆண்டு முதல் இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண வழிகாட்டலின் கீழ் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கடந்த 6 ஆம்திகதி சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துமூல பரீட்சைக்கு கம்பஹா மாவட்டத்தில் தோற்றிய கேட்டல் குறைபாடுள்ள 76 பேரில், சித்தியடைந்த 44 பேருக்கு தற்காலிக சாரதி பயிலுனர் அனுமதிப்பத்திரம் (Learner Permit) வழங்கப்பட்டது.

அத்துடன், மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு நடைமுறைத் தேர்வில் சித்தியடைந்தவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த ஸ்ரீயான் கொடித்துவக்கு கருத்து தெரிவிக்கையில், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதைப் பாராட்டுவதாகவும், இது தொடர்பாக உலக செவிப்புலனற்றோர் சம்மேளனத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக இருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்ற முடிந்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கேட்டல் குறைபாடுள்ளவர்களும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாட்டில் சுமார் 388,000 கேட்டல் குறைபாடுள்ளவர்கள் உள்ளனர், அவர்களில் 39,000 பேர் கம்பஹா மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

நாடு முழுவதும் இருந்து சுமார் 1,000 கேட்டல் குறைபாடுள்ளவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்டல் குறைபாடுடையவர்கள் தங்களது பணியை எளிதாக்க சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும் அமைச்சரின் தலையீட்டினால் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் நிபுணர்கள் பிரிவின் விசேட ஆதரவு கிடைத்தது.

எனவே, இன்று தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் மூன்று மாதங்களில், முழுமையான நடைமுறைப் பயிற்சி பெற்று, வீதி விதிகளை புரிந்து கொண்டு, வாகனங்களை செலுத்தி, இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular