ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் தனது 96வது வயதில் கடந்த 30ம் திகதி உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்த சீனாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் சீன தூதரகத்திற்கு சென்றிருந்தனர்.
சீன தூதுவரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தனது அனுதாபத்தை பகிர்ந்துக்கொண்டார்.
அதன்பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தனது அனுதாபத்தை, சீன தூதுவரிடம் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
1989ம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய ஜியாங் ஸேமின், 1993ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை சீன ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.
1989ஆம் ஆண்டு தியெனமென் ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஸேமின், உலக அரங்கில் வலிமையான நாடாக்கும் இலக்கு நோக்கி சீனாவை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

