Saturday, July 27, 2024
HomeTamilசீனாவின் ஆதரவு எப்போதும் இலங்கைக்கு!

சீனாவின் ஆதரவு எப்போதும் இலங்கைக்கு!

சீனாவுடன் இறப்பர் அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இலங்கை, தங்களுக்கு வழங்கிய ஆதரவை சீன மக்கள் ஒருபோதும் மறந்து விடமாட்டார்கள் என சீன துணைப் பிரதமர் டிங் ஷீசியான் (Ding Xuxiang) தெரிவித்தார்.

அத்துடன் சீனா இலங்கைக்கு தமது ஆதரவை எப்போதும் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன துணைப் பிரதமருக்கும் இடையில் நேற்று பீஜிங் நகரில் இடம்பெற்ற, இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே சீன துணைப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்த சீன துணைப் பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் சீன இலங்கை இறப்பர் அரிசி ஒப்பந்தம் இலங்கை செய்து கொண்ட முதலாவது வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கை என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளினதும் பொதுவான கொள்கைகளுக்கு அமைவாக புதிய வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின்போது, சீனா வழங்கிய ஆதரவை பெரிதும் பாராட்டுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை-சீன நட்புறவு கடந்த காலத்திலிருந்து வலுவான மட்டத்தில் இருந்ததாகவும், குறிப்பிட்டார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அடையாளத்தையும் அமைதியையும் பாதுகாப்பதில் இலங்கை மிகுந்த கவனம் செலுத்துவதாகவும், இந்து சமுத்திரம் அதிகாரப் போட்டிக்கு பலியாவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதே இலங்கையின் எதிர்பார்ப்பாகும். அதேபோல், பிராந்திய பொருளாதார உறவுகளுக்கான அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular