Saturday, July 27, 2024
HomeTamilஇந்தியாவில் இருந்து முதல் தொகுதி முட்டைகள் இறக்குமதி!!

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி முட்டைகள் இறக்குமதி!!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த முட்டை கையிருப்பு இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்த முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

இந்த முட்டைகள், கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த போதிலும் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் பல முறை அது தாமதமானது.

இந்தநிலையில், இந்தியாவில் இருந்து 20 இலட்சம் முட்டைகள் இறக்குமதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அதில் முதல் தொகுதியாக தற்போது 10 இலட்சம் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

சுகாதார அமைச்சினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேவையான பரிசோதனைகளைத் தொடர்ந்து குறித்த முட்டைகள் இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்தவும், உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்கவும் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பொதுமக்களின் உபயோகத்திற்காக வர்த்தக நிலையங்களில் விற்கப்படாது என்றும், இவை 40 ரூபா அல்லது அதற்கு குறைவான விலையில் வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முதல் தொகுதி வருகையை முன்னிட்டு, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரியும் 50 ரூபாவிலிருந்து ஒரு ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பு, கடந்த பெப்ரவரி 21 முதல் 3 மாதங்களுக்கு அமுலாகும் என நிதியமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular