Saturday, July 27, 2024
HomeTamilஅஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

உரிய வகையில் வங்கிக் கணக்குகளை திறக்காததன் காரணமாக 156,261 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை உள்ளிட்ட உரிய தரப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சமூக நலன்புரி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அஸ்வெசும வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேன்முறையீடு மற்றும எதிர்ப்புகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளதன் காரணமாக பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவுகளை வழங்கும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக இதன்போது தெரியவந்ததோடு, அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்தி செய்து பயனாளிகளுக்கு விரைவில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

மேலும், 2 இலட்சம் பயனாளிகள் இதுவரையில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்காததன் காரணமாகவே அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல் இல்லை என்றும் ஜயந்த விஜேரத்ன சுட்டிக்காட்டினார்.

மேலும் பிரதேச சபையினால் அஸ்வெசும கணனிக் கட்டமைப்பிலிருந்து வழங்கப்படும் கடிதத்தின் மூலம் தமது பிரதேசங்களிலுள்ள மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளைகளில் அஸவெசும பயனாளிகள் தங்களுக்கான கணக்குளை ஆரம்பிக்க முடியும் என்றும், அதன் பின்னர் வங்கியினால் அந்த தகவல்கள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டை இல்லாததன் காரணமாக வங்கிக் கணக்குகளை திறக்காதிருப்பவர்களுக்கு 06 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தையுடன் இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கியில் கணக்குகளை திறப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular