Saturday, July 27, 2024
HomeTamilவிவசாயத்துக்கு உதவும் USAID – சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்

விவசாயத்துக்கு உதவும் USAID – சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்

காலநிலை வினைத்திறன் கொண்ட விவசாயத்தில் ஈடுபடும் மூன்று மாவட்டங்கள் முழுவதிலுமுள்ள ஆயிரங்கணக்கான சிறு விவசாயிகளுக்கு உதவுவதன் நிமித்தம் சர்வதேச அபிவிருத்திகான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) காலநிலை தழுவல் திட்டமும் (Climate Adaptation Project) சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் குழுமமும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

மே 15 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் அடிப்படையில், இந்த திட்டமும் கொழும்பைத் தளமாக கொண்ட இந்த நிறுவனமும் அநுராதபுரம், பதுளை மற்றும் மொனராகல மாவட்டங்களிலுள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பயிர் ஆலோசனைகளையும் ஏனைய விவசாய உள்ளீடுகளையும் கொண்டுச் சேர்க்கும். இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மறுமலர்ச்சி நிகழ்ச்சித் திட்டத்தினால் அடையாளம் காணப்பட்ட 15 முன்னுரிமை பயிர்களில் ஐந்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் காலநிலை வினைத்திறன் கொண்ட விவசாயத்திற்கு இந்த பங்காண்மை உதவும்.

அமெரிக்கா 75 ஆண்டுகளாக இலங்கையுடன் வலுவான பங்காளியாக இருந்து வருவதுடன், நாம் முன்னோக்கி செல்கிறோம் என்ற வகையில், தனியார் துறையுடனான USAID இன் பங்காண்மையானது நிலையான பொருளாதார வளர்ச்சியையும் மற்றும் செழிப்பையும் உருவாக்க உதவும், என்று USAID இன் இலங்கைக்கான பணிப்பாளர் கேப்ரியல் க்ரவ் தெரிவித்தார். உதாரணமாக, சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தமானது, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்ப செயற்படுவதற்கு விவசாயிகளுக்கு உதவுவதற்கான தகவல்களுக்குரிய அவர்களது அணுகலை மேம்படுத்துவதுடன், காலநிலை வினைத்திறன் கொண்ட விவசாயத்தை முன்னேற்றுவதற்கு ஒத்த எண்ணம் கொண்ட வணிகங்களையும் இது ஊக்குவிக்கும், என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றின் ஊடாக எமது விவசாயிகளின் வலையமைப்புக்கான நிலைமாற்றத்தில் முன்னணி வகிப்பதில் நாம் பெருமை கொள்கிறோம், என்று சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் குழுமத்தின் முகாமைத்தவ பணிப்பாளர் சேமாலி விக்கிரமசிங்க தெரிவித்தார். ஸ்திரமான மற்றும் மேம்பட்ட விவசாய வாழ்வாதாரத்தை விளைவிக்கும் நிலையான விவசாய நடைமுறைகள் ஊடாக உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை உயர்த்துதலானது எமது செயற்பாடுகளின் நிலைத்தன்மைக்கும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கும் முக்கியமாகும். எமது விவசாயிகளின் வலையமைப்பு மற்றும் இலங்கையின் விவசாயத் துறையின் மீளெழுச்சித்திறனுக்கு உதவக்கூடிய அறிவு பரிமாற்றம் மற்றும் காலநிலை சார்ந்த சிறந்த நடைமுறை தொடர்பில் வசதி செய்வதற்கு USAID உடன் பங்காளியாக இருப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனிப்பயனாக்கப்பட்ட, இருப்பிடம் மற்றும் பயிர் அடிப்படையிலான ஆலோசனைகள் வணிகத்திற்கும் மற்றும் விவசாயிகளுக்கும் பயனளிக்கும் என்று சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஏனெனில், அவை விவசாயிகள் காலநிலை வினைத்திறன் கொண்ட முடிவுகளை எடுக்க உதவும்.

இலங்கையில் காலநிலை தகவல் வலையமைப்பொன்றை நிறுவுவதற்கான USAID இன் காலநிலை தழுவல் திட்டத்தின் முயற்சியையும் இந்த ஒப்பந்தம் பூர்த்தி செய்கிறது. இத்தகைய வலையமைப்பொன்றானது, மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைமையுடன் கூடிய தனிப்பயனாக்கப்பட்ட, இலக்குவைக்கப்பட்ட காலநிலை தகவல்களை வழங்குவதற்கு தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் முக்கிய பங்குதாரர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆற்றலை மேம்படுத்தும் என்று இந்தத் திட்டம் எதிர்ப்பார்க்கிறது. விவசாயம் தொடர்பான முடிவுகளுக்கு ஏனைய காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால், சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்காக உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விரிவாக்கம், உள்ளீடு வழங்கல், தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பிற சேவைகளுடன் காலநிலை தகவல்களைத் தொகுக்க தனியார் துறை விவசாய வணிகங்களுடன் இந்த திட்டம் இணைந்து பணியாற்றும்.

USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐந்தாண்டு காலநிலை தழுவல் திட்டமானது, விவசாயம், மீன்பிடி, மற்றும் சுற்றுலாத்துறையில் நிலையான மற்றும் உள்வாங்கிய சந்தை அடிப்படையிலான வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் வழிகளில் காலநிலை மாற்றத்திற்கு பதிலளிப்பதற்கும் மற்றும் அனுசரித்து செயற்படுவதற்குமான அரச, தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூகங்களின் திறன்களை மேம்படுத்துகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular