Saturday, July 27, 2024
HomeTamilஅனைவரினதும் ஆதரவு அவசியம்!!

அனைவரினதும் ஆதரவு அவசியம்!!

ஜனநாயகத்திற்கு அமைவாக நாட்டை மறுசீரமைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் வெற்றியடைய அனைவரினதும் ஆதரவு அவசியம் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

‍13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகள் பிரபல்யமற்றதாக இருந்தாலும், நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட நம்பிக்கையான தீர்மானம் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் எதிர்பார்த்த புதிய அரசியல் பயணத்தின் ஆரம்பமாக இந்த முயற்சிகள் பெரும் சவாலுடன் எடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குவதா அல்லது அதற்கு மேலதிகமான அதிகாரம் வழங்கப்பட வேண்டுமா அல்லது இந்த மாகாண சபை முறையை நீக்க வேண்டுமா என்று பொது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரம், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பல தரப்பினரும் பல்வேறு கருத்துகளை முன்வைப்பதோடு, பொலிஸ் அதிகாரம் என்ற விடயத்தில் ஆயுதம் தாங்காத பொதுமக்கள் பொலிஸ் முறையை வழங்குவது குறித்து கவனம் செலுத்தலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருப்பது ஒரு சிறந்த விடயமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்புப் பொறிமுறையை மாற்றாமல் இந்த நாட்டை ஆள முடியாது. இதனை இந்நாட்டு மக்களும், இந்த நாட்டை ஆட்சி செய்யப்போகும் இளைஞர்களும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். அரச செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டுமாயின் அனைத்து குடிமக்களின் அபிலாஷைகள், அரசியல் அபிலாஷைகள் மற்றும் சமூக தேவைகளை நிறைவேற்றுவது அவசியமாகும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் வெற்றியடைய வேண்டுமாயின் ஒருதரப்பு மீது இன்னொரு தரப்பு வைக்கும் அரசியல் நம்பிக்கை மூலமே அது சாத்தியமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ் நாட்டுக்கு 12 % சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியுமென்றால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எம்மால் தெற்காசியாவில் பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular