Saturday, July 27, 2024
HomeTamilபொருளாதாரம்EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ள சில நிறுவனங்கள்!!

EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ள சில நிறுவனங்கள்!!

சில பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும், பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது.

பெருந்தோட்டத்துறையில் சில நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட சுமார் 700 மில்லியன் ரூபாய் தொகை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் முரண்பட்ட நிலைமை காரணமாக கணக்கில் பதிவுசெய்ய முடியாமல் உள்ளதாகவும் குழுவில் புலப்பட்டது.

வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கடந்த ஜூன் 22 ஆம் திகதி கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

ஊழியர்களை பாதுகாத்துக்கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டிய நிலுவையையும் மாதாந்தக் கொடுப்பனவையும் முறையாகச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு அமைய கணக்குகளை ஆரம்பிப்பதன் மூலம் ஒரு நபருக்குப் பல கணக்குகள் காணப்படும் சிக்கலை நீக்க முடியும் எனவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படுமாறும் அதிகாரிகளுக்குக் குழு ஆலோசனை வழங்கியது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார், இஷாக் ரஹுமான், மஹிந்தானந்த அழுத்கமகே, வடிவேல் சுரேஷ், கே. சுஜித் சஞ்சய, எம். உதயகுமார், சந்திம வீரக்கொடி மற்றும் துஷார இந்துனில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர், தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய வங்கியில் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular