Saturday, July 27, 2024
HomeTamilஅப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் அறிமுகம்!

அப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் அறிமுகம்!

அப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட் WWDC 2023 நிகழ்வில் வைத்து அறிவிக்கப்பட்டது. அப்பிள் விஷன் ப்ரோ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஹெட்செட் பற்றிய தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் மெய்நிகர் தொழில்நுட்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் ஏ.ஆர். எனப்படும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் வி.ஆர். எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலிகளை சப்போர்ட் செய்கிறது. தனித்துவம் மிக்க டிசைன் கொண்டிருக்கும் விஷன் ப்ரோ மாடலை கட்டுப்படுத்துவதற்கு பிரத்யேக கண்ட்ரோலர் போன்று எந்த சாதனமும் தேவையில்லை. இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் மற்றும் கேமராக்களை கொண்டு வாய்ஸ் இன்புட் மற்றும் செய்கை மொழியிலேயே இதனை இயக்கி விட முடியும்.

இதுதவிர ஆப்பிள் உருவாக்கி இருக்கும் ஐசைட் (Eyesight) எனும் அம்சம் வெளிப்புற டிஸ்ப்ளே மற்றும் ஹெட்செட் உள்புறத்தில் இருக்கும் கேமராக்களை கொண்டு ஹெட்செட் பயன்படுத்துவோரின் உணர்வுகளை மற்றவர்களுக்கு காண்பிக்கிறது. மிக குறைந்த எடை கொண்டிருக்கும் விஷன் ப்ரோ அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள டிஜிட்டல் கிரவுன் கொண்டு பயனர்கள் எந்த அளவுக்கு மெய்நிகர் அனுபவத்தை பெற வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். இத்துடன் அனைவரின் தலையிலும் எளிதில் பொருந்தும் வகையில் பல்வேறு அளவுகளில் இந்த ஹெட்செட்-இன் ஹெட் பேண்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அணிபவருக்கு மென்மையாகவும், அதிக சவுகரியத்தை கொடுக்கும் வகையிலும், எளிதில் அட்ஜஸ்ட் செய்யும் வகையிலும் இருக்கிறது.

விஷன் ப்ரோ மாடலின் ஹெட்பேண்ட்-இல் டூயல் டிரைவர் ஆடியோ பாட்கள் உள்ள. இவை பயனர்களுக்கு ஸ்பேஷியல் ஆடியோ தொழிநுட்பத்தை வழங்குகின்றன. ஹெட்செட் எடையை மேலும் குறைப்பதற்காக விஷன் ப்ரோ மாடலில் வெளிப்புற பேட்டரி யூனிட் உள்ளது. வயர் மூலம் பேட்டரி மற்றும் ஹெட்செட் இணைக்கப்பட்டு உள்ளது.

கேமராவை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் மூன்று எலிமெண்ட் லென்ஸ்கள், ஹை-ரெஸ் மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் இரண்டு IR கேமராக்கள், LED இலுமினேஷன்கள் உள்ளன. இந்த சாதனம் LiDAR மற்றும் வழக்கமான கேமரா சென்சார்களையும் பயன்படுத்துகிறது. இந்த ஹெட்செட் ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இது முற்றிலும் புதிய R1 சிப் மற்றும் M2 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

சஃபாரி போன்ற செயலிகளை பயன்படுத்திக் கொண்டே, நிஜ உலகில் மனிதர்களுடன் உரையாட முடியும். வீட்டிற்குள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ சாலைகளிலும் பயன்படுத்த முடியும். விஷன் ப்ரோ ஹெட்செட்டில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிக கேம்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டொலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular