Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கைக்கு தலைமைப் பதவி!!

இலங்கைக்கு தலைமைப் பதவி!!

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதியன்று கொழும்பில் இலங்கை நடாத்தவுள்ள 23ஆவது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்காக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

அவுஸ்திரேலிய உதவி வெளியுறவு அமைச்சர் டிம் வொட்ஸ், பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் கொழும்பில் நடைபெறும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மசாஹிரோ கொமுரா, கொரியா வெளியுறவு அமைச்சின் அரசியல் விவகாரங்கள் துணை அமைச்சர் சுங் பியுங்-வோன், ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன், ஆகியோரும் இந்த கூட்டத்தில் இணையவுள்ளனர்.

அமைச்சர்கள் குழு என்பது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் மிக உயர்ந்த அமைப்பாகும். தற்போதைய தலைவரான பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் தலைமைப் பதவியை வழங்கும்போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சபைக்கு தலைமை தாங்குவார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 25ஆவது கூட்டம் (ஒக்டோபர் 9 முதல்10வரை) நடைபெறும்.

23ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில் 2023 முதல் 2025 வரையான காலப்பகுதிக்கான இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் தலைமைப் பதவியை இலங்கை ஏற்கவுள்ளது.

வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு, மீன்பிடி முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில், சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட ஆறு முன்னுரிமைப் பகுதிகளில் ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சல்மான் அல் ஃபரிசி மற்றும் மொரிஷியஸில் உள்ள இந்து சமுத்திர எல்லை சங்க செயலகத்தின் பணிப்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular