Saturday, July 27, 2024
HomeTamilஅரிசி தட்டுப்பாடு!!!

அரிசி தட்டுப்பாடு!!!

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் உள்ள நிலையில் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக உருவாக்க முயற்சிக்கும் அரிசி தட்டுப்பாடு இந்த பண்டிகை காலத்தில் அரிசியின் விலையை உயர்த்தும் தந்திரம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அதிக விலைக்கு விற்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களை மட்டுமே ஆய்வு செய்து வழக்குத் தொடர நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

அரிசி அல்லது பிற உணவுப் பொருட்களை மறைத்து வைக்கும் நபர்கள் மீது வழக்குத் தொடரவோ அல்லது அத்தகைய இடங்களை ஆய்வு செய்யவோ அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

இதன்காரணமாக, அரிசி பதுக்கல்காரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தில் தேவையான திருத்தங்கள் அடுத்த மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரிசியை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சர் இணங்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மிஹிந்தலை நாயக்க தேரரை சந்தித்த போது தெரிவித்த கருத்து தொடர்பிலும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அரிசி பற்றாக்குறையை பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களும் உருவாக்குகின்றனர். எவ்வாறாயினும், இந்த பண்டிகைக் காலத்தில் கீரி சம்பாவுக்கு அதிக தேவை இருப்பதால், 300,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முன்மொழியப்பட்டது, ஆனால் விவசாய அமைச்சர் என்ற வகையில் நான் அதை 50,000 மெட்ரிக் தொன்னாகக் குறைக்க முன்மொழிந்தேன்.

மேலும், 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரிசி தட்டுப்பாடு காரணமாக 800,000 மெட்ரிக் தொன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், ஆனால் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரையில் இதுவரை வெளிநாட்டிலிருந்து ஒரு தானிய அரிசி கூட இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

“நாங்கள் இந்த ஆண்டு முழுவதும் நம் நாட்டின் அரிசியை உட்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு அரிசி இறக்குமதிக்காக செலவிட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை எமது விவசாயிகள் அரசாங்கத்திற்கு சேமித்துள்ளனர். எனவே நாட்டு மக்கள் எமது விவசாயிகளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular