Saturday, July 27, 2024
HomeUncategorized50 வீதத்தை நெருங்கியுள்ள ஆசிரியர் பற்றாக்குறை!!

50 வீதத்தை நெருங்கியுள்ள ஆசிரியர் பற்றாக்குறை!!

பல்கலைக்கழகங்களில் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதுடன் ஆசிரியர் பற்றாக்குறை 50 வீதத்தை நெருங்கியுள்ளதாக பேராசிரியர் பரண ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 11,900 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 6,000 இற்கும் குறைவானவர்கள் தான் இருக்கின்றார்கள். இந்நிலையால் பல்கலைக்கழக செயற்பாடுகளை தடையின்றி நடாத்தி செல்வதற்கு விரிவுரையாளர்கள் பாரிய பணிச்சுமைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அமைப்பினுள் பணிபுரிந்த விரிவுரையாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் ஜனவரி மாதமளவில் 6,300 ஆகக் குறைந்ததுடன் கடந்த 7 மாதங்களில் மேலும் 500 தொடக்கம் 600 வரையிலான விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விரிவுரையாளர்களின் வெளியேற்றத்தால் அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமே பாதிக்கப்படுகிறது என்ற பொதுவான எண்ணத்தில் உண்மையில்லை. தனியார் பல்கலைக்கழகங்களும் இதனால் சமனான பாதிப்பை எதிர்கொள்கின்றன. ஏனெனில் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றுவதும் அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தான்.

மூளைசாலிகள் வெளியேற்றம் செலுத்தும் தாக்கத்தை அரச தனியார் என்று பிரிக்க முடியாது. மூளைசாலிகள் வெளியேற்றத்தைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

மூளைசாலிகள் வெளியேற்றத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் தலையீடு செய்து அதனைக் குறைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்தார்.

விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளிநாடுகளில் மிக இலகுவாக வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய குழுவினராவர். இந்த நாட்டில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முறையாகக் கொண்டு செல்லக்கூடிய சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் நாட்டிலிருந்து வெளியேறுவது அவர்களின் விருப்பமாகும்.

வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதால் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் போல் , தகுதியுள்ள விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதால் நாட்டின் கல்வித்துறையும் பாரிய எதிர்மறையான தாக்கத்தை எதிர்கொள்ளும் என பேராசிரியர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular