Friday, July 26, 2024
HomeTamilஅமைச்சரவையைக் கைது செய்ய வேண்டும்- உதய கம்மன்பில!

அமைச்சரவையைக் கைது செய்ய வேண்டும்- உதய கம்மன்பில!

வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 43 ஆவது ஏற்பாட்டை மீறி , அமைச்சரவை சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டுள்ளது.

நாட்டின் பொதுச்சட்டத்துக்கு அமைச்சரவை கட்டுப்பட வேண்டும். ஆகவே அமைச்சரவையை கைது செய்ய பொலிஸ்மா அதிபர் கவனம் செலுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதியுடன் கம்பஹா தரால்வாவில் பகுதியில் இருந்த ‘பன்டு கரந்த அல்லது க்ரூடியா சிலனிக்கா’என்ற அருகி வரும் மரம் அவ்விடத்திலிருந்து வெட்டி அகற்றப்பட்டதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் தைரியமாக தெரிவிக்கிறார்கள்.

நாட்டில் பன்டுகரந்த என்ற மரம் ஒன்றல்ல ஏழு உள்ளன.20 மரக்கன்றுகளை நாட்டியுள்ளோம்.எதிர்வரும் நாட்களில் 200 மரக்கன்றுகளை நாட்டுவதாக கூறி இந்த மரத்தை வெட்டி வீழ்த்தியதை நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 43ஆவது பிரிவிற்கமைய இந்த மரத்தை வெட்டவும், வெட்டி வீழ்த்துவதற்கு கட்டளை பிறப்பிக்கவும் அமைச்சரவைக்கு அதிகாரம் கிடையாது.

வீதி அபிவிருத்திக்கு இந்த மரம் தடையாக இருக்குமாயின் மரத்தை பாதுகாப்பான முறையில் வேருடன் பிடுங்கி பிறிதொரு இடத்தில் நாட்டலாம் என சுற்றாடல்துறை அதிகார சபை நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவித்துள்ள போதும் அதை அமைச்சரவை கவனத்தில் கொள்ளவில்லை.

வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்யாமல் சட்டத்தை அமைச்சரவை கையில் எடுத்து சட்டவிரோதமாக மரத்தை அகற்றியுள்ளது.ஆகவே ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஒருமாத காலம் சிறை செல்லும் குற்றத்தை புரிந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைச்சரவை செயற்பட வேண்டும்.சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது.ஆகவே ‘பன்டு கரந்த ‘என்ற அருகிவரும் மர விவகாரத்தில் அமைச்சரவை சட்டத்தை மீறியுள்ளது.ஆகவே அமைச்சரவையை கைது செய்ய பொலிஸ்மா அதிபர் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular