Saturday, July 27, 2024
HomeTamilபுதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம் - ஜனாதிபதி

புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம் – ஜனாதிபதி

21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்னும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள அரசியல் கட்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஆணைக்குழுவில், மாணவர் பாராளுமன்றங்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு தேவையான பாடங்களை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் அந்த பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுமெனவும், புதிய தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவுதல் உட்பட கல்வித்துறையின் பல்வேறு சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் மாணவர்களிடத்தில் கருத்துகளை கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கான சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கானவர்களைத் தெரிவுசெய்த பின்னர், அதன் முதல் கூட்டத்தை இந்நாட்டின் முதலாவது பாராளுமன்றம் கூடிய தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular